புத்தாண்டே வருக!
சென்ற வருடம்...
அரிதாரம் பூசாத அரசியல் கேட்டேன்,
அரிதாரம் பூசுவோருக்கும்,அரசியல் சாயம் பூசினாய்.
பகுத்தறிவு வளரக் கேட்டேன்,
சிலையுடைப்பையும் பகுத்தறிவாய் காட்டினாய்.
உலக கொலையாளிகள் ஒழியக் கேட்டேன்,
ஓருவனுக்கு தூக்கும்,
மற்றொருவனுக்கு 'உலக காவலன்' பட்டமும் தந்தாய்.
ஏழைகள் வேண்டுவன கிடைத்தல் கேட்டேன்,
இலவசமாய் எல்லாம் தந்து,
ஏழைகளை பிச்சைக்காரனாக்கினாய்.
காதல் ஓங்க கருணைக் கேட்டேன்,
காமத்தை காதலென திரையில் காட்டினாய்.
போதும்! போதும்!!
நான் கேட்டதும், பெற்றதும்...
நீயே தா! அளவறிந்து தா!
எண்ணெய் வளங்கள் அதிகம் வேண்டாம்,
தீவிரவாதமென அமெரிக்கா போர் தொடுக்கும்.
தமிழ்ப்பற்று அதிகம் வேண்டாம்,
காமகளியாட்ட படங்களுக்கும் 'தூய தமிழில்'
பெயர் வைக்க போராட தோண்றும்
பகுத்தறிவு இருப்பதே போதும்,
கருப்புசட்டை மஞ்சள் துண்டாகும் காலம்
வந்தாலும் வரலாம்.
சகோதர பாசம் அளவோடு போதும்,
அடிக்கடி நெடும்பயணம் போக நான் தயாராயில்லை.
அரசியல் ஆர்வம் அறவே வேண்டாம்,
'நான் திராவிடனா? ஆரியனா?' என்பதில்
'நான் மனிதனா?' என்பது மறந்தே போகும்.
ஆகையால்,புத்தாண்டே,
புத்தாண்டில் நீ எதைக் கொடுத்தாலும், அளவாய் கொடு.
-தியாகராஜன்
Saturday, December 30, 2006
Subscribe to:
Comments (Atom)